×

சிவராத்திரி, வார விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: சிவராத்திரி மற்றும் வார விடுமுறை நாட்களையொட்டி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிவராத்திரி (8ம் தேதி), சனி மற்றும் ஞாயிறு (9, 10ம் தேதி) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகம் தரப்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக நாளை 270 சிறப்பு பேருந்துகளும், 8ம் தேதி 390 பேருந்துகளும் மற்றும் 9ம் தேதி 430 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், கோயம்பேட்டிலிருந்து 70 பேருந்துகளும் மேற்கூரிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வார இறுதியில் நாளை 9,096 பயணிகளும், வெள்ளிக்கிழமை 7,268 பயணிகளும் சனிக்கிழமை 3,769 பயணிகளும் மற்றும் ஞாயிறுக்கிழமை 9,011 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சிவராத்திரி, வார விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Shivratri ,CHENNAI ,Transport Department ,Dinakaran ,
× RELATED முகூர்த்தம், வார இறுதி நாட்களை...